Latest News

Web Editor’s Column
Monday, June 18, 2018 6:44 PM
Fr. A. M. A. Prabakar,

அன்னையின் அன்பு பக்தர்களே!

விண்ணகப் பேரரசி மண்ணகம் வீதி உலா வந்தபோது இயற்கை எழில் கொஞ்சும்... அண்மையில் இணையதளத்தில் ‘கதவு’ என்ற குறும்படம் பார்த்தேன். Obsessive Compulsive Disorder-இனால் கஷ்டப்படுகின்ற ஒரு மனிதனைப் பற்றியது. ஆறு நிமிடம் நாற்பத்தொன்பது நொடிகள் மட்டுமே நீடிக்கிற படம், மிக நேர்த்தியாக சொல்லப்பட்ட ஒரு சிறுகதை போல மனதை கவர்கிறது. ஒரு படுக்கையின் தலைமாட்டில் இருக்கிற அலாரம் அலறுவதில் படம் ஆரம்பமாகிறது. அவன் அடித்துப் பிடித்து எழுந்து அவசர கதியில் ஆஃபிஸ் கிளம்புகிறான். கதவை  நன்றாக சாத்தி, பூட்டி, தாழ்ப்பாளை இருமுறை ஆட்டி, கதவு சரியாக பூட்டப்பட்டுவிட்டது என்பதை ஊர்ஜிதம் செய்துக் கொண்டு படிக்கட்டில் இறங்குகிறான். கொஞ்ச தூரம்தான்.....ஒரு ஐந்தாறு படிக்கட்டுகள் இருக்கும். அதற்குள் அவனுக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. “கதவை சரியாகத்தான் சாத்தினோமா?” திரும்பவும் ஏறிப் போகிறான். தாழ்ப்பாளை ஆட்டி சரிபார்த்துவிட்டு புறப்படுகின்றான். காம்பவுன்ட் கேட்டை தாண்டியதும் மீண்டும் சந்தேகம் வருகிறது.. திரும்ப ஓடுகிறான் கதவுக்கு. அடுத்தமுறை பஸ் ஸ்டாண்டிலிருந்து.

இப்படி கதவுக்கும் ரோட்டுக்கும் நூறு முறை ஓடினால் ஆஃபிசுக்கு எப்படி டயத்திற்கு போய் சேர முடியும். ஒவ்வொரு நாளும் லேட்டாக போய் மேனேஜரிடம் டோஸ் வாங்குகிறான். ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் மேனேஜர் அவனை வேலையைவிட்டு நின்றுவிடச் சொல்ல, “இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்கள்” என்று அவரிடம் மன்றாடிக் கேட்டு வீட்டிற்கு வருகின்றான். அந்த இரவு முழுவதும் அவனுக்கு பயங்கர மன உளைச்சல். “எப்படி இதை எதிர்கொள்வது?” 

அடுத்த நாள் காலை. 

வழக்கம்போல் அலாரம் அடிக்கிறது. அவன் நிதானமாக எழுந்து தயாராகின்றான். மாமூலான காரியங்கள் முடிந்தவுடன், கதவைப் பூட்டும் அந்த அதிமுக்கியமான கட்டம் வருகின்றது. “இன்றோடு இந்தப் பிரச்சினைக்கு எப்படியாவது முடிவு கட்டியாக வேண்டும்.” கதவைப் பூட்டிவிட்டு தாழ்ப்பாளை பிடித்தபடியே கொஞ்ச நேரம் நிற்கும் அவன் பின்னர் ஏதோ முடிவெடுத்தவனாய் மீண்டும் சாவியைப் போட்டு, தாழ்ப்பாளை விலக்கி, கதவை அகல திறந்து விடுகிறான். குப்பென்று ஒரு கற்றை வெளிச்சம் அவன் முகத்தில் வந்து விழுகிறது. பெரிதாக புன்னகைக்கிறான். அடுத்து அவன் செய்வதுதான் ஆச்சர்யம். அதுவரை கதவைப் பூட்டி சரிபார்ப்பதிலேயே குறியாயிருந்தவன், இன்று திறந்த கதவை அப்படியே விட்டுவிட்டு ஆஃபிஸ் கிளம்புகிறான். கேட்டில் நின்று கொண்டு மீண்டும் ஒரு முறை தன் வீட்டை திரும்பி பார்க்கிறான். அதே புன்னகை. இப்பொழுது ஒரு துள்ளல் நடையில் வந்து ஒட்டிக்கொள்கிறது. லைஃப் இம்ப்ரிசன்மென்ட் தண்டனை ரத்தாகி, ஜெயிலில் இருந்து வெளிவந்த கைதியைப் போல, சந்தோஷமாக ரோட்டில் ஓடுகின்றான். டாப் ஆங்கிளிலிருந்து கேமிரா கீழிறங்கி அவனை தழுவிக் கொண்டு மேலே போய், ஸ்கை ஸ்க்ரேப்பர்ஸின் உச்சிகளை உரசிவிட்டு, நீல வானத்தில் குத்திட்டு நிற்க, படம் சுபம். 

அபாரம்.

இந்த குறும்படம் ஏழு நிமிடத்தில் எத்தனை விஷயங்களை சொல்லிவிடுகிறது என்று யோசித்துப் பார்த்தேன். 

ஒரு பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் உள்ள ஒரு ஆள் எப்படி அந்த சிக்கலிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்கிறான் என்று காட்டப்படுகிறது.  It is by bravely trying the opposite.  இருட்டு உனக்கு பயம் தருகிறதா, அப்படியென்றால், தொடர்ந்து இருட்டிலேயே  நட, இரு. Befriend your enemy. இருட்டை பற்றிய பயம் உனக்கு அறவே போகும் வரை, அதோடு அதிகம் பழகு, நட்பு பாராட்டு. இது ஒரு வகையான உளவியல் சித்தாந்தம். அதைத்தான் இந்த குறும்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். கதவு சரியாக பூட்டப்பட்டிருக்கிறதா இல்லையா என்பது பற்றிய ப்ரியாக்குபேஷனில் அவதிப்படுகிற அவன் கதவை திறந்து விட்டே போவதன் மூலம் விடுதலை அடைகிறான். He takes a plunge. விளைவு, கை (கதவு) மேல் பலன்.

இன்னொரு தளத்தில் கதையை நகர்த்திக்கொண்டு போனால், அங்கு கதவு ஒரு குறியீடாகிறது. மூடியுள்ள கதவு, மூடியுள்ள மனதிற்கு ஒரு allegory. மூடப்பட்டுள்ள எதுவும் எளிதில் கெட்டுப்பொய் விடுகிறது. விவேக் ஒரு படத்தில் பிச்சைக்காரி கோவை சரளாவைப் பார்த்து சொல்வார். “அது என்ன மூணு நாளா மூடி வச்ச பிரியாணிய தொறந்தது மாதிரி அப்படியொரு நாத்தம்..” உங்கள் மனதை மூடியே வைத்திருக்காதீர்கள். நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிடும். திறந்து விடுங்கள். புதுக் காற்று, புது வெளிச்சம்  கொஞ்சம் படட்டும். அது நலன் தரும். மாடர்ன் மருத்துவம் நமக்கு சொல்வதும் இதுதானே. மனசை லேசாக வைத்திருங்கள். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது: யாரிடமாவது மனம் திறந்து பேசுவது. ரோட்டில் பேப்பர் பொறுக்குகிறவன் கண்டவற்றையும் எடுத்து தன் கோணிப்பைக்குள் அமுக்கி வைப்பது போல, எல்லா விஷயங்களையும் போட்டு மனதில் அடைத்து வைக்காதீர்கள். அதற்கும் ஒரு லிமிட் இருக்கிறது. 

நம் முன்னாள் போப்பாண்டவர் ஒருவர் இதே கருத்தை சொல்லியிருக்கிறார் தெரியுமா? திருந்தந்தை 23-ம் ஜான். சிறிது நாட்களில் இறந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட stop-gap போப். ஆனால் அவர் திருச்சபையில் கொண்டு வந்த மாற்றம் எல்லாரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை திறந்து வைத்து அவர் சொன்ன இந்த வாக்கியம் உலகப் ப்ரசித்தம்: “Come, let us open the windows of the Church, so some fresh air comes in…” “வாருங்கள்... திருச்சபையின் சன்னல்களை திறப்போம்.. கொஞ்சம் புதிய காற்று உள்ளே நுழையட்டும்...” இன்று திருச்சபையில் நாம் காணும் பல்வேறு மாற்றங்களுக்கு, அன்று திருத்தந்தை 23-ம் ஜான் திறந்து வைத்த சன்னல்களும், கதவுகளும்தான் காரணம். 

வேளாங்கண்ணிக்கு நீங்கள் மேற்கொள்ளும் திருயாத்திரை, உங்கள் மனக் கதவுகளை திறப்பதற்கு, நலன் பெறுவதற்கு அருமையான வாய்ப்பு. அது திருத்தலத்தில் செயல்படும் உள ஆற்றுப்படுத்தும் மையத்தை அணுகுவதன் மூலம் சாத்தியமாகிறது.